ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த பிரிட்ஜெட் மற்றும் பவுலா பவர்ஸ் என்ற இரட்டை சகோதரிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். ‘Twinnies’ என அழைக்கப்படும் இந்த 50 வயது இரட்டையர்களின் வீடியோ, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தங்கள் தாயார் ஹெலன் மீது நடைபெற்ற துப்பாக்கி மிரட்டலையும், அவ்விதமான சூழ்நிலையில்கூட இருவரும் ஒரே நேரத்தில், ஒரே வார்த்தைகளை பேசும் திறனும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் இவர்கள் அளித்த பேட்டியில், ஸ்டீவ் இர்வின் வேயில் நடந்த கார்திருட்டு சம்பவம் குறித்து இருவரும் உணர்ச்சியோடு கூறிய போது, “ஓடுங்க… அவன் கையில் துப்பாக்கி இருக்கு!” என ஒரே நேரத்தில் ஒரே சுருக்கத்துடன் பேசினர். இந்த உரையாடல், இணைய பயனாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இச்சம்பவத்தின் போது, அவர்களின் தாயார் ஹெலன், துப்பாக்கியுடன் இருந்த நபரிடம், “நீ நல்லாயிருக்கியா?” என்று கேட்டபோது, அவர் மிரட்டியதாகவும், அந்த சமயத்தில் அவரது தாயார்  ஒரு நிமிடத்தில் அந்த நபரின் கவனத்தை மாற்றி வேலிக்குப் பின்னே காட்டுக்குள் ஓடிப் பதுங்கியதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் அந்த பேட்டியின் போது ஒரே நேரத்தில், ஒரே வார்த்தைகள் பேசும் விதம், கைகளின் அசைவுகள் மற்றும் முகபாவனைகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும்,  “இவர்கள் இருவருடன் ஒரு நாள் செலவழிக்க வேண்டியிருக்கும் எனில் நமக்கே குழப்பமாக இருக்கும்,” எனும் வகையிலான நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.