ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணி பாகிஸ்தானின் சதி என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர்.

இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சிந்து நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

1960-ஆம் ஆண்டு, பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் இணைந்து கையெழுத்திட்ட சிந்து நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் – சிந்து, ஜெலம், சினாப் ஆகிய மேற்கு நதிகளின் நீரை பயன்படுத்தும் உரிமை பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய நதிகள் வழங்கப்பட்டன. ஆனாலும், இந்தியா இதுவரை எந்த போர் நடந்தாலும் இந்த ஒப்பந்தத்தை கைவிடவில்லை.

பிரித்தானியர் விட்டுச்சென்றதும், 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி, இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லும் இரண்டு முக்கியமான நீர்வழிகளை தற்காலிகமாக முடக்கியது. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியிலுள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் வறண்டுவிட்டது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா  சிந்து நீரை நிறுத்தினால், பாகிஸ்தானில் கடும் பஞ்சம், பாசன நெருக்கடி, குடிநீர் தட்டுப்பாடு போன்றவை ஏற்படக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.