
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடிற்கு அருகில், இந்திய ராணுவம் இரு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது. அவர்கள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த பயங்கரவாதிகளிடமிருந்து சாக்லேட்டுகள், பாகிஸ்தான் ரூபாய், சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானின் நேரடி ஆதரவைத் தெளிவுபடுத்துகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக ஸ்ரீநகருக்கு வருகை தந்து, தாக்குதல் நடைபெற்ற பைசரன் பள்ளத்தாக்கை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். “தாக்குதலில் ஈடுபட்ட எவரும் தப்பமுடியாது” என அவர் உறுதியாகக் கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். முன்னணியில் இருந்த பயங்கரவாதிகள் மட்டுமல்ல, பின்னணியில் பதுங்கியிருப்போரும் கைதாக்கப்படுவர் என இராணுவம் தங்களது நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளது.