
ஃப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த நதனியல் பாரெல்லி என்ற இளைஞர், சாதாரண செவிலியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 21 வயதில் வேலைக்கு சேர்ந்த இவர், 24-வது வயதில் “Revitalize” என்ற தனது சொந்த நிறுவனத்தை தொடங்கி, வீடுகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்சிங் சேவையை வழங்க ஆரம்பித்தார்.
குறிப்பாக, கோவிட் காலத்தில் இந்த சேவைக்கு ஏற்பட்ட பெரும் தேவை, அவரது நிறுவன வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. மிகக் குறுகிய காலத்தில் சாதனை புரிந்த Revitalize நிறுவனத்தை, ஒரு பெரிய நிறுவனமான Option Care Health, ரூ.106 கோடிக்கு வாங்க விருப்பம் தெரிவித்தது.
இதனை ஏற்ற நதனியல், “இது Option Care Health போன்ற பெரிய நிறுவனத்திடம் சென்றால், இன்னும் அதிகமான நோயாளிகளுக்கு உதவ முடியும்” என எண்ணி விற்பனை செய்தார். தற்போது நதனியலின் மொத்த சொத்துமதிப்பு ரூ.119 கோடி. நதனியல் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பன்சகோலா, ஃப்ளோரிடாவில் உள்ள கடற்கரை வீட்டில் வசிக்கிறார்.
அவருக்கு விரைவில் 4-வது குழந்தையும் பிறக்கவிருக்கிறது. “நான் ஒரு நல்ல தந்தையாகவும், அன்பான கணவராகவும் இருக்க விரும்புகிறேன். பணத்தை சம்பாதிக்கிற வாழ்க்கையை விட, அதை பயன்படுத்தும் வாழ்க்கை எனக்கு முக்கியம்,” என நதனியல் கூறியுள்ளார்.
வட்டி வருமானத்தில் குடும்பத்தை நடத்தி, மீதி பணத்தை முதலீடு செய்து, அமைதியான குடும்ப வாழ்வை மேற்கொண்டு வருகிறார். இளமையில் ஓய்வுக்குச் சென்று குடும்பத்தையே வாழ்க்கையின் மையமாக்கும் அவரது முடிவு, இன்றைய தலைமுறைக்கு ஒரு புதிய கோணத்தை காண்பிக்கிறது.