உத்தரப்பிரதேச மாநில ஜான்பூர் மாவட்டம் முங்ராபத்சாஹ்பூர் காவல் நிலையத்தில், போலீஸ்காரர்கள் ஒரு இளைஞரை கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவில், இரண்டு காவலர்கள் இளைஞரை தூணில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அந்த வாலிபரை  மூன்றாவது அதிகாரி கடுமையாக தாக்குகிறார்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், காவல் ஆய்வாளர் விநோத் மிஸ்ராவிடம் பணம் கொடுத்து ஒரு தனிப்பட்ட வேலை செய்யக் கேட்டிருந்தார். ஆனால் விநோத் மிஸ்ரா அந்த வேலையை செய்யவில்லை.

இதனால் அந்த வாலிபர் பணம் கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் வினோத் தனது இரு உதவியாளர்களுடன் இணைந்து, இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கட்டிவைத்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, SHO விநோத் மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரது பதவிக்கு இன்ஸ்பெக்டர் திலீப் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.