
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசாங்கம் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த தாக்குதலில் இறந்த மக்களுக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது.
இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் துணை நின்ற நாடுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஒருவர் கூட தப்ப முடியாது. இந்த சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும். இந்தியாவின் தன்னம்பிக்கையை யாராலும் அழிக்க முடியாது. மேலும் பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவோம் என்றார்.