ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்புதான் காரணம் என்று கூறப்படும் நிலையில் இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு தூதரக அதிகாரிகளையும் வெளியேற வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பிறகு நேற்று பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான விசா நிறுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில் தற்போது விசா நிறுத்தப்பட்டது.

அதன்படி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விசாக்கள் வருகிற 27ஆம் தேதி வரையிலும் மருத்துவ காரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ள விசாக்கள் 29ஆம் தேதி முதலும் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது சிந்து நதிநீரையும் நிறுத்திவிட்டது. பாகிஸ்தான் நாட்டின் நீர்பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி நீர் மூலம் கிடைக்கும் நிலையில் அவர்களின் விவசாயத்திற்கு இது பெருமளவில் பயன்படுகிறது. தற்போது சிந்து நதிநீரை இந்திய அரசாங்கம் நிறுத்தியதால் இனி பாகிஸ்தானின் பல பகுதிகள் பாலைவனம் ஆகும் என்று கூறப்படுகிறது.

அங்கு விவசாயமும் பாதிக்கப்படும். அதன் பிறகு பாகிஸ்தான் கடற்பரப்பில் ஏவுகணை சோதனை செய்து வருவதால் அதற்கு பதிலடியாக இந்திய அரசாங்கமும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இதில் ஏவுகணை இலக்கை துல்லியமாக குறி வைத்து தாக்குதல் நடத்தியது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாய்ந்து வருவது அந்நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.