காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை குழு (CCS) கூட்டம் மிக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, SAARC Visa Exemption Scheme (SVES) அடிப்படையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 27ஆம் தேதி முதல் பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தப்படுகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவ காரணங்களுக்கான விசா வரும் 29ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடி ஆகும் என பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தம் தொடர்பாக புதிய ஆணையை வெளியுறவுத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.