
தேனி மாவட்டம் கூடலூர் கேகே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு விசாரணைக்கு சென்று விட்டு, காவல் நிலைய வேலைகளையும் முடித்துவிட்டு அம்பிகா வீட்டிற்கு செல்வதற்காக கம்பம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த நபர் அம்பிகாவை கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அம்பிகாவை வெட்ட முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அம்பிகா அவரை தடுக்க முயற்சி செய்தபோது, அம்பிகாவின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அம்பிகாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் கூடலூரை சேர்ந்த குபேந்திரன்(55) என்பது தெரியவந்தது.
குபேந்திரனுக்கும், அம்பிகாவின் குடும்பத்தினருக்கும் இடையே பாதை தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. அதனை மனதில் வைத்துக்கொண்டு குபேந்திரன் அம்பிகாவை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் குபேந்திரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.