
புவனேஸ்வரில் உள்ள பஞ்சகான் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தலில் சிறுவனுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுத்து வந்த ஆசிரியர் முக்கிய குற்றவாளியாக இருப்பது அம்பலமாகியுள்ளது.
புவனேஸ்வர் ஏர்பீல்ட் போலீசார், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். 22 வயதான சுபகாந்த் மோகாபாத்திரா என்ற ட்யூஷன் ஆசிரியர், தனது தோழிகள் மற்றும் நண்பர்களான சோமநாத் தாஸ் (21), சின்மய்நாயக் (22), சந்தீப் ரவுத்தரே (22), சாகர் நாயக் (21), சுஜாதா ஜேனா (19) மற்றும் நிபேதிதா தாஸ் (19) ஆகியோருடன் சேர்ந்து, காலை 10 மணியளவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவனை கடத்தினர்.
சிறுவனின் தந்தைக்கு, 10.30 மணிக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில், “உங்கள் மகன் கடத்தப்பட்டுள்ளார்” என கூறப்பட்டது. இதையடுத்து ஏர்பீல்ட், நிராகர்பூர் மற்றும் ராணிபுர் ஆகிய பகுதிகளில் போலீசார் ஒரே நேரத்தில் அதிரடித் தேடுதல் நடத்தினர். விசாரணையின் போது, ட்யூஷன் ஆசிரியர் மோகாபாத்திரா, கடத்தலுக்கு முன்பே பெற்றோரிடம் பேசிவிட்டு, “சிலர் அவரை துப்பாக்கியால் மிரட்டி சிறுவனை அழைத்துச்சென்றனர்” என்று பொய்யான தகவலை கூறியதும் தெரியவந்தது.
ஆனால் போலீசாரின் கடும் விசாரணையில் உண்மை வெளியே வந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவனின் குடும்பம் சமீபத்தில் ஒரு நிலத்தை விற்பனை செய்துவிட்டு பெரிய தொகை பெற்றிருப்பதை அறிந்ததும், ஆசிரியர் தனது கூட்டாளிகளுடன் இந்தக் கடத்தல் சதி திட்டத்தை தயாரித்தது தெரியவந்தது.
சிறுவனை கடத்தியவர்கள், அவரை நரகர்பூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வைத்து இருந்தனர். அதே இடத்தில் இருந்து சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதுடன், கடத்தலில் பயன்படுத்தப்பட்ட காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.