
ஐரோப்பிய யூனியனில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் படங்களும், காணொளிகளும் இணையத்தில் அதிகரித்து வருகின்றன என்று Internet Watch Foundation (IWF) வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2.91 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெதர்லாந்து, ருமேனியா, போலந்து போன்ற நாடுகளில் இது போன்ற ஆன்லைன் குற்றம் அதிகம் காணப்படுவது கவலையை ஏற்படுத்துகிறது. போலந்தில் மட்டுமே கடந்த 2023இல் வெறும் 94 இணைய வலைதள பக்கங்கள் இருந்த நிலையில், கடந்த 2024இல் 8,077 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலும் இணைய வழியில் குழந்தைகள் தொடர்பான ஆன்லைன் குற்றங்கள் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், தேசிய குற்றவியல் பதிவுகள் பணியகம் (NCRB) வெளியிட்ட தரவுகள் படி, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1.94 லட்சம் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2019 முதல் இதுவரை 69 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களை அமெரிக்காவின் NCMEC அமைப்புடன் இணைந்து இந்திய அரசு பெற்றுள்ளது. மேலும், புதிய AI தொழில்நுட்பத்தின் மூலம் போலியான பாலியல் படங்களை உருவாக்கும் புதிய கலாசாரம் சமூகத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இது, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை மீண்டும் ஒரு முறை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.