விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். சின்னத்தம்பி தனது நிலத்தை அளவீடு செய்து சான்றிதழ் பெறுவதற்காக வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இப்ராஹீமை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது இப்ராஹிமும், கிராம உதவியாளர் சிங்காரமும் நிலத்தை அளவீடு செய்து சான்றிதழ் கொடுக்க 5 ஆயிர் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சின்னத்தம்பி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சின்னத்தம்பி இப்ராஹிம் மற்றும் சிங்காரம் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இப்ராஹிம், சிங்காரம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.