
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக வாகா எல்லை மூடப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு விசாவையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்த கட்சியின் எம்எல்ஏ அமினில் இஸ்லாம் தற்போது பகல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீசார அதிரடியாக கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், அவர் பேசியதற்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்திற்க்கே கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்று கூறியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.