
காஷ்மீரில் உள்ள வசந்த் கார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உளவுத்துறை ரிப்போர்ட்டின் படி உடனடியாக அந்த இடத்திற்கு ராணுவ வீரர்கள் சென்றனர். ராணுவத்தின் சிறப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது. பின்னர் அவர்களை உடனடியாக சரணடையுமாறு ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தீவிரவாதிகள் அதனை ஏற்காமல் துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதனால் பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்ற நிலையில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
அதாவது ஜான்டு அலி ஷேக் என்ற சிறப்பு படைவீரர் வீர மரணம் அடைந்த நிலையில் அவருடைய தியாகத்தை யாராலும் மறக்கவே முடியாது. இந்த துயரமான நேரத்தில் அவருடைய குடும்பத்தினருக்கு ராணுவம் உறுதுணையாக இருக்கும் என்று ஆறுதல் கூறியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த மூன்றாவது துப்பாக்கி சண்டை இதுவாகும். ஏற்கனவே காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிர படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.