
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிகாரிகள் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணி நேற்று தொடங்கிய நிலையில் அதிகாரிகள் வரையாடுகளின் வாழ்விடங்களுக்கே சென்று கணக்கெடுக்கும் பணிகளை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த வகையில் நேற்று மாலை மணிகண்டன் என்பவரும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.
இதைப் பார்த்த சக வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுத்தனர். ஆனாலும் அவர் உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய சடலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மாரடைப்பின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.