ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானைச் சேர்ந்த தடகள வீரர் அர்ஷத் நதீமை மே மாதம் பெங்களூருவில் நடைபெறும் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டிக்கு அழைத்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதனால் ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா  தற்போது  சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், தாம் அனுப்பிய அழைப்புகள் தாக்குதலுக்கு முன்பே அனுப்பப்பட்டவை என்றும், அது ஒரு தடகள வீரருக்கு மற்றொருவர் அனுப்பிய அழைப்பாக மட்டுமே பார்க்க வேண்டியது  என்று கூறியுள்ளார்.

“இந்த அழைப்பு எனது சொந்த முடிவாக இருந்தாலும், அர்ஷத்தின் வருகை குறித்து பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிலைமைகள் முற்றிலும் மாறிவிட்டன. எனது நாடும் அதன் பாதுகாப்பும் எப்போதும் என் முன்னுரிமையாகவே இருக்கும்,” என நீரஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தனது குடும்பத்தினரையும் சமூக ஊடகங்களில் குறிவைத்தது வேதனையளிக்கிறது என்றும், தாம் எளிய மனிதர்கள் எனவும், வெறுப்பு இல்லாமல் அணுக வேண்டும் எனக்கூறியுள்ளார். “ஒரு விளையாட்டு போட்டியில் அனைத்து சிறந்த தடகள வீரர்களையும் அழைக்கும் முயற்சியாகத்தான் இது ஆரம்பிக்கப்பட்டது,” என்றும் விளக்கினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Neeraj Chopra (@neeraj____chopra)

சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பியதாக குற்றம்சாட்டிய நீரஜ் சோப்ரா, கடந்த வருடம் என் அம்மாவை புகழ்ந்தவர்கள் தற்போது என் தாயை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார்கள். இதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. “நான் என் நாட்டின் மரியாதைக்காக தொடர்ந்து உழைப்பேன். இந்தியா சரியான காரணங்களுக்காக உலக அரங்கில் மரியாதை பெறவேண்டும். என் நேர்மையையும் நாட்டுப்பற்றையும் கேள்விக்குள்ளாக்க வேண்டாம்,” என பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக, ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டிக்குள் அர்ஷத் நதீம் பங்கேற்பு குறித்து குழப்பம் நிலவுகின்ற நிலையில், பாதுகாப்பு சூழ்நிலைகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.