ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், அதில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அடில்உசேன் தோகர், அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா ஆகியோரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்காக ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், மூவரும் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படுகிறது.

புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் ஆசிப் ஷேக்கின் வீடு மற்றும் அனந்த்நாக் பிஜ்பேராவில் அடில் தோக்கரின் வீடுகள் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவோரை எச்சரிக்கும் வகையிலும், பயங்கரவாத ஆதரவை நிர்மூலமாக்கும் நடவடிக்கையிலும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஓவியங்களை சாட்சியங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

 

இதேநேரம், கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) கடந்த இரவு பாகிஸ்தான் ராணுவத்தால் தொடங்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல்  பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் “காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு” என சர்ச்சைக்குரியமாக பேசிய ஒரு வாரத்திற்குப் பிறகு இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி ஸ்ரீநகருக்கு வருகை தந்து பாதுகாப்பு நிலையை மதிப்பாய்வு செய்து வருகின்றார். பள்ளத்தாக்கின் நிலவரம் மற்றும் பாகிஸ்தானின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் முயற்சிகள் தொடர்பாக அவர் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.