
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சிவமொக்காவை சேர்ந்த மஞ்சுநாத் ராவ் என்பவர் உயிரிழந்தார். அதில் அவரது மனைவி பல்லவியும், மகன் அபய்ஜெயனும் உயிர் தப்பினர்.
இந்நிலையில் 18 வயதான அபய்ஜெயன் உள்ளூர் இஸ்லாமிய இளைஞர்களால் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அபய்ஜெயன் கூறியதாவது, “அந்தத் தாக்குதல் நடந்த தினத்தில் நான் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அப்பா, அம்மா இருவரும் எனக்கு ஏதாவது சாப்பிட வாங்கி வருவதாக கூறிச் சென்றனர்.
அதனால் நான் அங்கேயே இருந்தேன். அப்போது அருகில் ஒரு இடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஏதோ பட்டாசு வெடிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் சிறிது நேரத்தில் அனைவரும் ஓட தொடங்கினர். உடனே வேகமாக வந்த எனது அம்மாவும் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார்.
அப்போதுதான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது தெரிந்தது. நாங்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினோம். அப்பா எங்கே? என அம்மாவிடம் கேட்டேன். உடனே திரும்பி பார்த்தபோது எனது தந்தை துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். அந்த இக்கட்டான சமயத்தில் உள்ளுரை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் 2 பேர் எங்களை காப்பாற்றி ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்கச் சொன்னார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக சுற்றுலா சென்றோம் அது இப்படி நரகமாகும் என நான் நினைக்கவில்லை” என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.