ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் ராஜீவ் ஜஸ்ரோதியா, தேவேந்திர் மான்யால் ஆகியோர் தலைமையில் நேற்று கதுவாய் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இப்போது டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் ஷர்மா உள்ளிட்டோர் அவர்களிடம் பேட்டி எடுப்பதற்காக வந்தனர்.

 

அந்த பேட்டியின் போது இந்த தாக்குதலை தடுக்க தவறிய உளவுத்துறையும் மத்திய அரசும் தோல்வி அடைந்து விட்டதா என்று ராகேஷ் ஷர்மா கேள்வி எழுப்பினார். அப்போது கோபம் அடைந்த பாஜக தொண்டர்கள் பத்திரிக்கையளரை தாக்க தொடங்கிவிட்டனர். அவர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த ராகேஷ் சர்மா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீரில் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.