ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய கோரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கையை பல்வேறு உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு முக்கியமான பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள், வன்முறைகள் நடைபெறும் சூழ்நிலை நிலவுவதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில் எப்போதும் நிலவும் பதற்றம் காரணமாக அங்கு பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்றும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் ஆகிய சுற்றுலா பகுதிகள் பயங்கரவாதிகளின் டார்கெட் பகுதிகளாக இருப்பதால், அவை மிகுந்த அபாயமுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கிழக்கு லடாக் மற்றும் லே நகரம் போன்ற இடங்கள் இந்த எச்சரிக்கையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டு, இந்தியாவில் பயணிக்கும் தனது குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாகக் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.