
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மகாதேவன் குளம் பகுதியில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பிருந்தா (24) என்ற மனைவியும் இரண்டரை வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இதில் சரத் மற்றும் பிருந்தா இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.
கடந்த 23ஆம் தேதி பிருந்தா சாத்தான்குளத்தில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி மீண்டும் கட்டிலில் தூங்க வைத்தார். ஆனால் மறுநாள் காலை நீண்ட நேரம் ஆக குழந்தை எழுந்திருக்காததால் பிருந்தா மற்றும் அவரது தாய் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அதே சமயத்தில் குழந்தையின் உதட்டில் ரத்த காயம் இருந்துள்ளது.
இதனால் உறவினர்கள் சந்தேகம் அடைந்து திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அவர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் மர்ம மரணம் குறித்து பிருந்தாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது.
அதாவது பிருந்தா லிங்கசெல்வன் என்ற 29 வயது வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். இவருடைய நண்பர்கள் முத்து சுடர்(28), மற்றும் பெஞ்சமின் (25). இவர்கள் மூவரும் கடந்த 23ஆம் தேதி பிருந்தா வீட்டிற்கு பைக்கில் சென்ற நிலையில் குழந்தையையும் அந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு வாழைத்தோட்டம் பகுதிக்கு சென்றனர்.
அப்போது வாலிபர்கள் மூவரும் மது குடித்துவிட்டு பிருந்தாவுடன் மாறி மாறி உல்லாசமாக இருந்தனர். அந்த சமயத்தில் குழந்தை தண்ணீர் வேண்டும் என கேட்டதால் போதையில் இருந்த வாலிபர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுத்தனர். அதோடு குழந்தை உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும் என நினைத்து வாயை பொத்தி பின்னர் லிங்கசெல்வனுக்கு சொந்தமான ஐஸ்க்ரீம் கடையில் வந்து படுக்க வைத்தனர்.
இதை தொடர்ந்து மீண்டும் அவர்கள் பிருந்தாவுடன் உல்லாசமாக இருந்த நிலையில் நள்ளிரவில் குழந்தையை தூக்கி வாலிபர்கள் அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளனர். குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற பிருந்தா கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் பிருந்தா உட்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.