ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெங்களூரு உறுதியாகப் பிடித்துள்ளது.

இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர், அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி. அவர்  70 ரன்கள் அடித்து அசத்திய அவர், தொடக்கத்திலிருந்து இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாகத் தடம் பதித்துவருகிறார். தற்போது ஆரஞ்சு தொப்பி பட்டியலில் இரண்டாவது இடத்தில் திகழ்கிறார்.

போட்டியின் இடைவேளையில், பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் மற்றும் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விராட் கோலியிடம் ஆலோசனை கூற முயன்றனர். ஆனால் அதற்கு, எளிமையான புன்னகையுடன் கைகளை உயர்த்தி “வேணாம் சாமி” என கூறிய விதத்தில் கும்பிட்டார் விராட். இந்த தருணம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

போட்டி முடிந்தபின், உடை மாற்றும் அறையில் நடைபெற்ற உரையாடலில், தினேஷ் கார்த்திக் உருக்கமாகப் பேசினார். அதாவது “விராட் கோலியிடம் இருக்கும் வெற்றிக்கான பசியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளாக விளையாடுவது சாதனைதான். ஆனால், அந்த 18 ஆண்டுகளும் தொடர்ச்சியாக உயர்ந்த தரத்தில் விளையாடுவது மிகப்பெரிய சாதனை.அவருக்கு ஆலோசனை கூறும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது.

 

அணியின் முதல் மூன்று போட்டிகளின் போது அவர் என்னிடம் கூறியது இன்னும் நினைவில் உள்ளது. ‘இந்த வருடம் நான் நன்றாக உணர்கிறேன்’ என்றும், ‘என் பேட்டிங் பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடுதலாக வருகிறார்கள்’ என்றும் கூறினார்.”

“தன்னை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதிலும், அர்ப்பணிப்போடும் உறுதியோடும் விளையாடுவதிலும் அவர் ஒரு முன்னுதாரணம். தேவ்தூத் படிக்கல் மற்றும் பில் சால்ட் ஆகியோரை அவர் வழிநடத்திய விதம் மிகவும் பாராட்டத்தக்கது. அவரின் பாடி லாங்குவேஜ், அணிக்கு அளிக்கும் உற்சாகம் அனைத்தும் தனிக்கட்டியது” என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.