பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவை விட்டு செல்ல உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 287 பாகிஸ்தான் பிரஜைகள் வழிமுறையைப் பின்பற்றி நாட்டை விட்டு சென்றனர். அதே நேரத்தில் 191 இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பினர்.

இந்நிலையில், பாகிஸ்தான் குடிமக்களைத் திருமணம் செய்து கொண்டு வாழும் பல இந்திய பெண்கள், இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருந்த காரணத்தால், அவர்களை எல்லை பாதுகாப்புப் படையினர் (BSF) பாகிஸ்தான் செல்ல அனுமதிக்கவில்லை. இது அவர்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து வந்த வாஷின் ஜஹாங்கீர் (38) என்பவர், சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தார். தனது சகோதரி மற்றும் அவரது இரு மகள்களுடன் வந்த அவர், தற்போது எல்லையில் சிக்கிக் கொண்டுள்ளார். “எனது கணவர் மற்றும் இரு மகன்கள் பாகிஸ்தானில் எனக்காக காத்திருக்கிறார்கள்.

எனக்கு ‘பாதி குடிமகனாக’ அங்கு அங்கீகாரம் உள்ளது. தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்தும், எனது இந்திய பாஸ்போர்ட்டைப் பார்த்து எனை அனுப்ப மறுக்கின்றனர்,” என வருத்தத்துடன் கூறினார்.

அதேபோல, ஜோத்பூரிலிருந்து வந்த வஜிதா கான் என்பவரும் பாகிஸ்தான் குடிமகனை திருமணம் செய்தவர். “பத்து ஆண்டுகளாக பாகிஸ்தானில் வாழ்கிறேன். என் இரு குழந்தைகளும் அங்குப் பிறந்தவர்கள். இங்கு என்னை அனுப்ப மறுத்த பிறகு, குழந்தைகளை தனியாக அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்றார்.

“தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், எங்களை போன்ற சாதாரண மக்கள் இதற்காக துன்புறவேண்டியதில்லை,” என இருவரும் மனவேதனையுடன் தெரிவித்தனர்.

இதேவேளை, மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த பாகிஸ்தான் பிரஜைகளும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் பிரஜை பிதா ஹுசைன், கல்லீரல் மாற்றுச் சிகிச்சைக்காக டெல்லிக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி வந்திருந்தார். “விசா கிடைக்க பெரும் சிரமம் ஏற்பட்டது. நிறைய பணமும் செலவழித்தேன். இப்போது அனைத்தும் வீணாகிவிட்டது,” என்றார்.

இந்த புதிய முடிவுகள், அரசியல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பதற்கு இது சாட்சியாக உள்ளது.