
பிரிட்டனில் உள்ள ஜெயின் ஜோசப் ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் துணை ஆசிரியரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சடைய வைத்துள்ளது. கடந்த மார்ச் 5ஆம் தேதி பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆண்டனி பெல்டன் (54), பள்ளியில் உள்ள துணை ஆசிரியர் ரிச்சர்ட் பைக் (50) என்பவரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரிச்சர்ட் பைக்கை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த தாக்குதலுக்கு பிறகு பெல்டன் தனது காரில் தப்பிச்சென்று பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் மன்னிப்பு கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், பெல்டன் காதலிக்கும் ஆசிரியை உடன் பைக் சமீபத்தில் உறவில் இருந்ததாகவும், அதனை பெல்டன் பார்த்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் பின் தலைமை ஆசிரியர் பெல்டன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் தாமஸ், இது போன்ற சம்பவம் ஒரு தலைமையாசிரியரால் செய்யப்படுவது முன்னுதாரணம் இல்லாதது என கடுமையாக கண்டித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பைக் கூறியதாவது, நாங்கள் பல ஆண்டுகளாக நம்பிக்கை அடிப்படையில் வளர்ந்த நண்பர்கள். இப்போது அது நொறுங்கி விட்டது. இதன் தாக்கத்தை என்னால் சமாளிக்க முடியவில்லை என உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.
பெல்டன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வெல்டன் கடந்த காலங்களாக தனது தாயின் மரணம் மற்றும் புற்றுநோய் காரணமாக தனிப்பட்ட முறையில் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், அவரது மனநல பாதிப்பால் இச்சம்பவம் ஏற்பட்டு இருக்கலாம் என்று வாதிட்டார். இருப்பினும் நீதிபதி, இது ஒரு தனிப்பட்ட விரோதம் காரணமாகவே நடைபெற்று உள்ளது.
ஆனால் இது ஒரு பள்ளியின் சூழலில் நடைபெற்றது மிகவும் வெட்கக்கேடானது என்று கண்டித்து தலைமை ஆசிரியர் ஆண்டனி பெல்டனுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார். மேலும் ரிச்சர்ட் பைக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக காலவரையற்ற தடையும் பிறப்பிக்கப்பட்டது.