
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த ஜோஜு மேத்யூ (51) என்பவரிடம் முன்னணி நிதி நிறுவனம் என தன்னை அறிமுகப்படுத்திய மோசடிக்காரர்கள் பங்குச்சந்தை வர்த்தக சேவை மூலம் லாபத்தை அள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி ரூபாய் 50 லட்சம் பணத்தை தவணை முறையில் பல வங்கி கணக்குகளில் பரிவர்த்தனைகளாக பெற்றுள்ளனர்.
அதன்பின் பணத்தைப் பெற்றவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மேத்யூ கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், ஓசூரைச் சேர்ந்த குமரேசன்(29) என்பவரின் வங்கி கணக்கு மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் கூடுதலாக அவரது கணக்கில் ரூபாய் 90 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த சந்திராபுரா அருகே உள்ள எம். சிவக்குமார் (27), காரப்பள்ளியை சேர்ந்த எஸ். நித்தியா (32) ஆகியோர் தொடர்பும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மோசடி சம்பவத்திற்கு ஆதரவளித்த நித்தியா ஒரு தனியார் வங்கியின் உதவி மேலாளராக பணியாற்றி பலர் பெயரில் அனுமதி இல்லாமல் வங்கிக் கணக்குகள் திறக்க உதவியதாக கூறப்படுகிறது. மேலும் மூவரும் சேர்ந்து நாடு முழுவதும் 96 பேரிடமிருந்து பலகோடி ரூபாய்களை பங்குச் சந்தை வர்த்தக மோசடியில் சூழ்ச்சி செய்து பெற்றுள்ளதாகவும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த மோசடி கும்பல் இடமிருந்து 5 செல்போன்கள், 9 சிம் கார்டுகள், 25 டெபிட் கார்டுகள், 23 வங்கி பாஸ்புக்குகள், 62 காசோலை புத்தகங்கள், 3 முத்திரைகள் ,1 பில் புத்தகம் மற்றும் 1 க்யூ ஆர் ஸ்கேனர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த மோசடி குழு உடன் தொடர்புடைய மற்றவர்களையும் கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.