ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கந்தர்பல் மாவட்ட போலீசார் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த நபரை கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவின் அடிப்படையில், போலீசார் அதிவேகமாக நடவடிக்கை எடுத்து, ஐயாஸ் அஹமது ஜுங்கல் என்பவரை அடையாளம் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

இவர் சோனமார்க் பகுதியில் தாஜ்வாஸ் ஹிமநதியில் குதிரை சேவை வழங்குபவராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் முக்கியமான தகவல்களை உத்தரபிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த ஏக்தா திவாரி என்பவர் வழங்கியுள்ளார். அவர் தனது குடும்பத்துடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றபோது, தாக்குதல் நடத்தக் கூடியதாக சந்தேகிக்கப்படும் நபர்களில் இருவரை சந்தித்ததாக கூறியுள்ளார்.

ஏப்ரல் 20ஆம் தேதி பைசரன் பள்ளத்தாக்கில் கடத்துச் சவாரி செய்தபோது, மரூன் ஜாக்கெட் மற்றும் பைஜாமா அணிந்திருந்த நபர் தன்னிடம் மதம் குறித்து கேள்வி எழுப்பியதாக திவாரி தெரிவித்தார்.

மேலும், தாக்குதலுக்குப் பின் வெளியிடப்பட்ட ஸ்கெட்சில் காணப்படும் ஒருவர் தான் தன்னிடம் பேசிய ஒருவரின் முக ஜாடையில் ஒத்து போவதை உறுதியாக கூறினார்.

திவாரியின் கணவர் பிரஷாந்த் கவுதம் கூறுகையில், அவர்கள் 20 பேர் கொண்ட குழுவாக வைஷ்ணோ தேவி தரிசனம் முடித்து பஹல்காம் வந்ததாகவும், பயணத்தின் போது சந்தேக நபர்கள் திவாரியிடம் நீங்கள் ஹிந்து மதத்தை விரும்புகிறீர்களா?  அல்லது இஸ்லாம் மதத்தை விரும்புகிறீர்களா? என்று கேட்டதோடு, நீங்கள் குர்ஆன் படித்திருக்கிறீர்களா என்றும் விசாரித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், அந்த நபர்கள் திவாரியிடம் அமர்நாத் யாத்திரை பதிவு இல்லாமல் நேரடியாக ஏற்பாடு செய்யலாம் என்றும் கூறியதாகவும்,  அதில் ஒருவர் தொலைபேசியில் “பிளான் ஏ பிரேக் ஃபெயில், பிளான் பி 35 துப்பாக்கிகள் பள்ளத்தாக்கில் வைக்கப்பட்டுள்ளன” என்று பேசிக்கொண்டிருந்ததாக திவாரி கூறினார்.