ஈரானின் முக்கியமான ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட பெரும் வெடிப்பு மற்றும் தீ விபத்தில் 115 பேர் காயமடைந்தனர். துறைமுகப் பகுதியில் இருந்து புகை எழுந்தது குறித்து வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

ஹார்மோஸ்கான் மாகாணத்திலுள்ள பந்தர் அப்பாஸிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷாஹித் ராஜீ துறைமுகம், ஈரானின் முன்னணி கொள்கலன் துறைமுகமாகும்.

பிராந்திய துறைமுக அதிகாரி எஸ்மாயில் மலேகிசாதே, “துறைமுகத்தின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டது; தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.

ஹார்மோஸ்கான் ரெட் கிரசண்ட் அமைப்பின் தலைவர் மொக்தார் சலாஷூர் கூறுகையில், நான்கு விரைவு மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை ஆணைய தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே கூறியதாவது, பல கொள்கலன்கள் வெடித்ததே இந்த பேரழிவுக்கு காரணமாக இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். தலைநகர் தெஹ்ரானில் இருந்து தெற்கே 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த துறைமுகம், உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியமான பாதையில் உள்ள ஹார்மோஸ் நீரிணையின் அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.