தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புதுகிராமத்திலுள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது காவல்துறையினால் சுடுகாட்டுக்கு அருகில் சென்றதும் சுடுகாட்டினுள் நின்றவர்கள் சிலர் அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்தனர். ஆனால் காவல்துறையினர் அப்பகுதியில் நின்றவர்களை சுற்றி வளைத்ததில் மூன்று பேர் பிடிபட்டனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுடுகாட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அந்த கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கோவில்பட்டி காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த ராஜசேகர பாண்டி (32), கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(33), மற்றும் ஒரு 17 வயது கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவத்தை தொடர்ந்து கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது?, அப்பகுதியில் தப்பி ஓடியவர்கள் யார் யார்? என்பது குறித்த விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் சுடுகாட்டில் கஞ்சா விற்பனை சம்பவங்கள் நடைபெறுவது  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.