ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி உயிரிழந்த பரிதாபம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையில் பாகிஸ்தான் பங்கேற்கத் தயாராக உள்ளது என அறிவித்துள்ளார்.

அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஷெரீப், “பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முழு திறனுடனும் தயாராக இருக்கிறது. பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டித்து வருகிறது. பஹல்காமில் நடந்த சோகம் பழி சுமத்தும் விளையாட்டின் மற்றொரு எடுத்துக்காட்டாக உள்ளது. இது பற்றி உறுதி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர், “இந்தியா எங்கள்மீது பழி சுமக்கிறது. பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானின் தொடர்பைக் கூறும் ஆதாரமிருந்தால் அதை உலகத்திற்கு காண்பிக்கட்டும். எங்களின் நிலைப்பாடு தற்காப்பிற்காகவே உள்ளது,” என கூறினார். பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தும், ஆதாரம் கோரியும் பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இந்தியா பாகிஸ்தானுடன் பல இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நிலைமை மேலும் தீவிரமாகும் என கருதப்படுகிறது.