
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் நேற்று சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, காஷ்மீரில் நடந்த பயங்கரவாத சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இயற்கையாகவே அங்கு அமைதி திரும்பி இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை.
அதை கெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி தாக்குதல் நடத்துகிறார்கள். இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதலை நடத்தியவர்களையும் அதன் பின்னணியில் இருப்பவர்களையும் கண்டிப்பாக விரைந்து கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்கள் இது போன்ற செயல்களை கனவில் கூட செய்ய வேண்டும் என்று நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் விரைவில் அதை செய்யும் என்றும் நம்பிக்கை இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.