ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்புறம் பாகிஸ்தான் இருப்பதாகவும் அவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளதோடு அவர்களுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது. அதோடு சிந்து நதிநீரை நிறுத்தியதோடு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.

அதன்படி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற்றப்படும் நிலையில் மருத்துவ காரணங்களுக்காக தங்கி இருப்பவர்கள் 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 250 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 15 பேர் சென்னையில் இருக்கும் நிலையில் அவர்களின் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 215 பேர் சார்க் அமைப்பின் மூலமாக விசா பெற்று வந்துள்ள நிலையில் மற்றவர்கள் திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை துறை அதிகாரிகள் சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் அனைவரையும் 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.