பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசு அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) உடனடியாக மூட உத்தரவிட்டதை அடுத்து, ஈரானை சேர்ந்த சுற்றுலாப் பயணியான அகலம் இந்தியாவில் சிக்கிக் கொண்டுள்ளார். இவர் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இருக்கிறார்.

சனிக்கிழமையன்று பேசிய அகலம், தானிடம் ரோடு விசா இருப்பதை குறிப்பிட்டு, “இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வழியாக ஈரானுக்குச் செல்லும் ஒரே பாதை இது. எனக்கு சாலை வழி சுற்றுலா விசா உள்ளது. ஆனால் அதிகாரிகள் இப்போது பாகிஸ்தான் பிரஜைகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறுகிறார்கள். எனது நாடு ஈரான் என்பதால், தயவுசெய்து இந்த வாகா எல்லையை வழியாக என்னை அனுப்ப அனுமதி வழங்குமாறு உள்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.

“நாங்கள் ஈரானியர்கள். எங்களுக்கான சாலை வழி இதுவே. அதனால்தான் தனிப்பட்ட வாகனத்தில் பயணம் செய்கிறேன். இந்த வாகனத்தில் நான் மட்டும்தான் இருக்கிறேன்” எனவும் அவர் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களையும் உடனடியாக ரத்து செய்தது. நீண்டகால விசாக்கள் மற்றும் அதிகாரபூர்வ விசாக்கள் மட்டும் செல்லுபடியாகும். மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், அகலம் தனது வேதனையை வெளிப்படுத்தியபோது, “நேற்றிலிருந்து நான் இங்கே இருக்கிறேன். சுற்றுலாப் பயணிகள் இறந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. நானும் ஒரு சுற்றுலாப் பயணி தான். ஆனால் இப்போது நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியிடமும் உள்துறை அமைச்சரிடமும் என் கோரிக்கையை முன்வைக்கிறேன் – தயவுசெய்து என்னை என் நாட்டிற்குப் போக அனுமதியுங்கள்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அகலம் இந்தியாவை தனது “இரண்டாவது வீடாக” கருதி, இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தும், தன்னுடைய பிரச்சினையை அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லுமாறும் கேட்டுக்கொண்டார். “இந்திய மக்களை நான் மதிக்கிறேன். நான் இந்தியாவை நேசிக்கிறேன். இது என் இரண்டாவது வீடு போல. ஆனால் தற்போது உங்கள் உதவி தேவைப்படுகிறது,” என்று அவர் சோகமாக தெரிவித்தார்.