காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு கூறுவதால் அவர்களுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது. அதன்படி பாகிஸ்தானியர்களுக்கு விசாவை இந்தியா நிறுத்திய நிலையில் அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

அதோடு சிந்து நதிநீரையும் நிறுத்திவிட்டனர். குறிப்பாக சிந்து நதி நீரை நிறுத்தியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவர்களும் சிம்லா ஒப்பந்த உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். அதோடு எல்லைகளில் ராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளதால் போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சிந்து நதிநீரை நிறுத்தியதற்காக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக தற்போது பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளது. அதாவது ஐநா சபையின் விதிகளை மீறி இந்தியா மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் புகார் கொடுத்துள்ளது. மேலும் சிந்து நதி நீரை மீண்டும் இந்தியா திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.