
முன்னாள் இந்திய ராணுவ துணைத் தளபதி (VCOAS) லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன் அவர்கள், 78 வயதில் காலமானார். அவரது மறைவு குறித்து இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. “இதயத்தில் ஒரு சிப்பாய், ஆன்மாவில் ஒரு தலைவர்” என்று அவரை பாராட்டி, அவரது சேவைகளுக்கு ராணுவம் மரியாதை செலுத்தியது. இந்த தகவல் சனிக்கிழமை X வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் அவர்கள், தனது நீண்ட இராணுவ வாழ்க்கையில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, பாம்பே சாப்பர்ஸின் கர்னல் கமாண்டண்டாக பணியாற்றியுள்ளார். மேலும், இந்திய ராணுவத்தின் தகவல் அமைப்புகளின் முதல் இயக்குநராகவும், மேற்குக் கட்டளையின் இராணுவத் தளபதியாகவும் (GOC-in-C, Western Command) சிறப்பாக பணியாற்றியுள்ளார். தனது 40 ஆண்டுகளின் சேவைக்குப் பிறகு, 2006ஆம் ஆண்டு ராணுவ துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“முன்னாள் VCOAS லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமனின் மறைவால் ஏற்பட்ட இழப்புக்கு ஜெனரல் உபேந்திர திவேதி (COAS) மற்றும் இந்திய ராணுவத்தின் அனைத்து அணிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் மனமார்ந்த ஆறுதல் தெரிவிக்கிறோம்” என்று இராணுவம் தெரிவித்துள்ளது. “லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமனின் சேவை மற்றும் நாட்டுக்காக செலுத்திய பணி என்றென்றும் நமது இதயங்களில் பொறிக்கப்பட்டிருக்கும்,” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.