
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் 26 பேர் இறந்த நிலையில்ம் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு டி.ஆர்.எஃப் (TRF) என்பது லஷ்கர்-இ-தொய்பாவின் உட்பிரிவாக கருதப்படுகிறது.
ஏப்ரல் 26ஆம் தேதி சனிக்கிழமை இரவு, பாதுகாப்புப் படையினர் ஷோபியன் மாவட்டம் வந்தினா ஜைனபோராவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அட்னான் சஃபியின் வீட்டை இடித்து தகர்த்தனர். மூன்று வினாடிகளில் அந்த வீடு தகர்க்கப்பட்டது. அட்னான் சஃபி, 2024ஆம் ஆண்டு லஷ்கர் அமைப்பில் சேர்ந்தார் மற்றும் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதேபோல, குப்வாராவில், பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதி ஃபரூக் அகமதுவின் வீட்டையும் வெடிப்புப் பொருள் மூலம் சிதைத்தனர். இதுவரை, அட்னான் சஃபி, ஃபரூக் அகமது, அடில் தோகர் (அனந்த்நாக்), அஹ்சன் உல் ஹக் ஷேக் (புல்வாமா), ஆசிப் அகமது ஷேக் (டிரால்), ஷாஹித் அகமது குட்டே (சோபியன்) மற்றும் ஜாஹித் அகமது கானி (குல்காம்) ஆகிய 7 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பிஜ்பேஹாராவில், லஷ்கர் பயங்கரவாதி ஹுசைன் தோக்கரின் வீடு ஒ குண்டுவெடிப்பின் மூலம் தகர்க்கப்பட்டது. டிரால் பகுதியில் ஆசிப் ஷேக்கின் வீடு புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் இவர்கள் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அனந்த்நாக் மாவட்ட காவல்துறை, அடில் தோகர், மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா ஆகிய மூன்று பயங்கரவாதிகளுக்காக ரூ.20 லட்சம் பரிசை அறிவித்துள்ளது. இவர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.