ஈரானின் பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள ஷாஹித் ராஜாய் துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள இந்த துறைமுகம், ஈரானின் மிகப்பெரிய வணிக துறைமுகமாகும் என்பதால் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், துறைமுக வளாகத்தின் ஒரு பகுதியில் கொள்கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் காரணம் இன்னும் தெளிவாக தெரியாத நிலையில், அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபதேமே மொஹஜெரானி, “தீ முழுவதும் அணைக்கப்படாத வரை காரணத்தை உறுதிப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார். பலத்த காற்று தீயணைப்பு பணிகளை கடுமையாக பாதித்து வருகிறது.

வெடிவிபத்தின் தாக்கமாக, துறைமுக வளாகத்தில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. சுற்றுவட்டார பகுதிகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. சில இடங்களில் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலர் பந்தர் அப்பாஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்களை மூடவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பந்தர் அப்பாஸ் நகரத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், இந்த விபத்து சம்பந்தமாக நெருக்கடியான விசாரணை நடத்த உள்துறை அமைச்சரை சிறப்பு பிரதிநிதியாக அனுப்பி, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். “பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கின்றேன். விபத்தின் காரணங்களை விரைவில் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என அவர் X  பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஷாஹித் ராஜாய் துறைமுகம் ஆண்டுதோறும் சுமார் 70 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் முக்கியமான வர்த்தக துறைமுகமாகும். தற்போது, துறைமுக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், பாதுகாப்பு காரணங்களால் கடல் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.