இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனில் பேட்ஸ்மேன்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் இந்திய வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட பட்டியல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் தனது நேரடியான கருத்துகள் மூலம் சமூக ஊடகங்களில் விவாதங்களைத் தூண்டுபவராக அறியப்படும் மஞ்ச்ரேக்கர், இப்போது தனது ‘முக்கியமான பேட்ஸ்மேன்கள்’ பட்டியலில் விராட் கோலி, சாய் சுதர்சன் மற்றும் ஐடன் மார்க்ராமை சேர்க்காததால் ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றார்.

மஞ்ச்ரேக்கர் பகிர்ந்த பட்டியலில் நிக்கோலஸ் பூரன் (377 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 205), பிரியாஞ்ஷ் ஆர்யா (254 ரன்கள், SR 202), ஷ்ரேயாஸ் ஐயர் (263 ரன்கள், SR 185), சூர்யகுமார் யாதவ் (373 ரன்கள், SR 167), ஜோஸ் பட்லர் (356 ரன்கள், SR 166) உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்தனர்.
ஆனால், அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இருக்கும் விராட் கோலி (392 ரன்கள், SR 144.11), சாய் சுதர்சன் (417 ரன்கள், SR 152.18) மற்றும் ஐடன் மார்க்ராம் (326 ரன்கள், SR 150.92) ஆகியோரை மஞ்ச்ரேக்கர் பட்டியலில் சேர்க்கவில்லை. இது ரசிகர்களிடையே பெரிய எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.

 

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பட்டியலின் அடிப்படை அளவுகோளாக குறைந்தது 250 ரன்கள் மற்றும் 153 அல்லது அதற்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட் என்பதைக் கொண்டு தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால்தான் கோலி, சுதர்சன், மற்றும் மார்க்ராம் போன்றோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இருப்பினும், சாய் சுதர்சன் தற்போது ஆரஞ்சு தொப்பியை தக்கவைத்து 417 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார் மற்றும் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பதால், இவர்களை பட்டியலில் சேர்க்காதது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். ரசிகர்கள், “இது உண்மையிலேயே சரியான மதிப்பீட்டா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.