இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தலைமை பயிற்சியாளரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த 21 வயதான ஜிக்னேஷ் சிங் பர்மர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொறியியல் மாணவர் என்றும், அவரது குடும்பத்தினர் அவருக்கு மனநலப் பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு 1:37 மணிக்கு, கம்பீரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. இதில், டெல்லி போலீஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஸ்வேதா சவுகானுக்கு நேரடியாக சவால் விடுக்கப்பட்டிருந்தது.

“உங்கள் டெல்லி காவல்துறை எதுவும் செய்ய முடியாது,” என்றும், “உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் எங்களுக்குத் தெரியும்,” என்றும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது. இது முந்தைய இரண்டு கொலை மிரட்டல் மின்னஞ்சல்களுடன் இணைக்கப்பட்டு பார்க்கப்பட்டது. அதற்கிடையில், கம்பீரின் வீட்டின் வெளிப்புற பகுதியின் வீடியோவும் அனுப்பப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கவுதம் கம்பீர் டெல்லி மத்திய மாவட்ட டி.சி.பி ஸ்வேதா சவுகானிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இதைப் பின்பற்றிக் காவல்துறையினர் அவரது வீட்டில்  பாதுகாப்பு அதிகரித்துப்பட்டு, விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மிரட்டல் மின்னஞ்சல்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்த போலீசார், ஜிக்னேஷ் பர்மரை மத்திய மாவட்ட காவல் குழுவினர் கைது செய்தனர். முதல் விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதையடுத்து, அவரது மனநிலை பற்றிய விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “முன்னதாக வந்த இரண்டு மின்னஞ்சல்களிலும் கொலை மிரட்டல் நேரடியாக வெளிப்படையாக கூறப்பட்டிருந்தது. புதிய மின்னஞ்சல் நேரடி கொலை மிரட்டல் அல்லாதபோதும், அது முற்றிலும் அச்சுறுத்தல் தன்மை கொண்டது என்பதால் தொடர்ந்தும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தனர்.