
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பஹேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மூன்று குழந்தைகளின் தாயான கிருதி தேவி, ஒரு மைனர் சிறுமியை கடத்தியது மட்டுமில்லாமல், அவருடன் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதற்கும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இரண்டு ஆண்டுகளாக தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி, சிறுமியின் தந்தை பஹேரி காவல் நிலையத்தில், தனது மகள் காணாமல் போனதாக புகார் அளித்தார். இதையடுத்து ஏப்ரல் 11ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் கிருதி தேவி மற்றும் சிறுமி இருவரும் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தெரிந்ததும், கிருதி தேவியின் கணவர், தன்னை விட்டுப் பிரிந்து செல்லமுடியாது என மனைவியுடன் தகராறு செய்ததாகவும், ஆனால் மனைவி சிறுமியை விட்டுப் பிரிய மறுத்ததாகவும் கூறியுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான கிருதி தேவி, தனது கணவருடன் கடந்த 11 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். அவரது கணவர் கூலித் தொழிலாளி ஆக ராஜஸ்தானில் வேலை செய்கிறார்.
சனிக்கிழமை காலை போலீசார், ராஜஸ்தானில் இருந்த கிருதி தேவி, அவரது கணவர் மற்றும் சிறுமியை கைது செய்து தர்பங்காவிற்கு கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, மூன்று குழந்தைகளின் தாயும் அவரது கணவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி விசாரணைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிறுமியின் தாய் கூறுகையில், “கிருதி தேவி எங்களின் மூத்த மகளின் மதினி என்பதால், அவர் எங்கள் வீட்டிற்கு வரும்போது மரியாதையுடன் நடத்தினோம். ஆனால் அவர் இத்தகைய மோசமான செயலை செய்யமாட்டார் என்று நம்பியிருந்தோம். எங்களுடைய சிறுமியிடம் இப்படி நடந்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கையிலேயே அவரை வீட்டிற்குள் அனுமதித்தோம்,” என கூறினார்.
இந்த சம்பவம் தற்போது தர்பங்கா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி மீட்கப்பட்டிருப்பதாலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாலும், காவல்துறை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றது.