
திருப்பத்தூர் மாவட்டம் சின்னவரிகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுதாகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் அவரது மனைவி தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் சுதாகர் தனது மனைவியுடன் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது.
அந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் அரசு பள்ளிகளில் திருமண நாள் கொண்டாட்டம் பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருமலைவாசன் விசாரணை நடத்தி சுதாகரை உதயேந்திரம் அரசு பள்ளிக்கும், அதை அனுமதித்த பள்ளி ஆசிரியை சரோஜினியை வெங்கிலி பள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் அரசு பள்ளியில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருமலைவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.