
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், விடுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை இரண்டு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, ஒரு அரசு விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். விவேக் மற்றும் ஜிதேந்திர சண்டேல் என்ற இருவர், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களில் நட்பாக பழகி சிறுமியை அழைத்து வந்து போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
சிறுமி அச்சத்தில் யாரிடமும் சொல்லவில்லை. இருப்பினும், சமீபத்தில் சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, பரிசோதனையில் சிறுமி இரு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது உண்மை தெரியவந்தது. இதனால் விவேக் மற்றும் ஜிதேந்திர சண்டேல் ஆகிய இருவரின் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் விவேக்கை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு குற்றவாளியை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவம், பள்ளி மாணவிகள் மீதான பாதுகாப்பு மீள சிந்திக்க வைக்கும் வகையில் பெரும் அதிர்வலை எழுப்பியுள்ளது.