
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று முன்தினம் மற்றும் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமான மூலம் நடிகர் விஜய் வருகை புரிந்தார்.
அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கோவை ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு கொடுத்த தொண்டர்கள் பின்னர் ரோடு ஷோ நடத்தும் போதும் வழிநெடுகிலும் சென்றனர்.
நடிகர் விஜய்யை காண பிரம்மாண்ட கூட்டம் வந்தது. நடிகர் விஜய் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற பூத் கமிட்டி கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட நிலையில் கோவையில் தான் இருக்கிறார்.
அவர் கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில் இன்று சென்னைக்கு கிளம்புவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அருகே உள்ள ஒரு இடத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த இடத்திற்கு அருகே வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த போது அங்கு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. அதாவது விஜய் அவினாசியில் உள்ள லீமெரிடியன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில் அந்த ஹோட்டலுக்கு அருகே கோகுலம் பார்க் என்ற மற்றொரு ஹோட்டல் உள்ளது.
இந்த ஹோட்டலுக்கு தான் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் படி போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்தபோது அங்கு எதுவுமில்லை வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இருப்பினும் விஜய் தங்கியுள்ள ஹோட்டலுக்கு தற்போது போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர். மேலும் அருகே உள்ள ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது விஜய் தங்கியுள்ள ஹோட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.