ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு இந்தியன் நகரை சேர்ந்தவர் பிரவீன். எம்.இ பட்டதாரியான பிரவீனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பிரவீன் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த பிரவீன் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்துள்ளார். நேற்று முன்தினம் நடைபயிற்சி செய்வதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு பிரவீன் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பி வராததால் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது கிரிக்கெட் மைதானம் அருகே இருக்கும் ஒரு கிணற்றுக்கு அருகே பிரவீன் காலணிகள் இருந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடியபோது பிரவீனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மன உளைச்சலில் பிரவீன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.