
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் கோடலா துணை சிறைச்சாலை வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்வு சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 வயதான சூர்யகாந்த் பெஹெரா, நேற்று பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணை சிறை வளாகத்திலேயே திருமணம் செய்தார்.
மணமகனும், மணமகளும் இருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் பாரம்பரிய இந்து சடங்குகளின்படி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவை முன்னிட்டு சிறை வளாகத்தில் பண்டிகை சூழல் நிலவியது.
சூர்யகாந்த் பெஹெரா, காவல்துறையினால் கைது செய்யப்படுவதற்கு முன்பு குஜராத்தின் சூரத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது காதலி இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தவறான புரிதலால் வாலிபர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததாக, மணமகளின் வழக்கறிஞர் பி.கே. மிஸ்ரா தெரிவித்தார்.
தற்போது, இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததை அடுத்து, சட்ட நடைமுறைகளை பின்பற்றி சிறை நிர்வாகம் திருமண ஏற்பாடுகளை செய்தது. சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனத்தில் மணமகன் திருமண மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
திருமணத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் இரு குடும்பங்களும் இணைந்து ஏற்றுக் கொண்டனர். திருமண விழாவுக்குப் பிறகு, மணமகன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு, மணமகள் வீடு திரும்பினார். அவரது தந்தை, “சூர்யகாந்த் விரைவில் விடுதலைபெற்று, மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.