
புவி வெப்பமடைதலை சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் தற்போது அதிரடி நடவடிக்கையை எடுக்கவுள்ளது. சூரிய ஒளியை நேரடியாகக் குறைக்கும் புதிய பரிசோதனை திட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆராய்ச்சி பணிக்காக சுமார் 50 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி ரூபாய்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பரிசோதனையின் கீழ், சிறப்பு வகை ஏரோசோல் துகள்களை வளிமண்டலத்தின் உயர் அடுக்கான ஸ்ட்ரேட்டோஸ்பியரில் வெளியிடும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம், சூரிய கதிர்களை பூமிக்குள் நுழைய தடுக்க முடியும், இதனால் பூமியின் வெப்பநிலை சற்று குறையும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலும், மேகங்களை பிரகாசிக்கச் செய்வதன் மூலமும், அதிகமான ஒளியை விண்வெளிக்கு திருப்பி அனுப்பி பூமியின் வெப்பத்தை குறைக்கும் முயற்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பரிசோதனைகள் பல நன்மைகளை தரக்கூடியவையாக இருந்தாலும், அதே சமயம் ஆபத்துகளும் உள்ளன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இயற்கை வானிலை சுழற்சி முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயம் இருக்கலாம்.
குறிப்பாக, மழை வீச்சில் மாற்றம், புயல்கள் அதிகரிப்பு, மற்றும் வறட்சிப் பகுதிகள் உருவாகும் சாத்தியம் அதிகம் உள்ளது. இதனால், எந்தவொரு பரிசோதனையும் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்பான கட்டுப்பாடுகளுடனும் மேற்கொள்ள வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் வலியுறுத்தல்.
இந்த திட்டத்திற்கு அட்வான்ஸ்ட் ரிசர்ச் & இன்வென்ஷன் ஏஜென்சி (ARIA) நிதியளிக்கிறது. இந்த நிறுவனம் பாதுகாப்பான ஆராய்ச்சி முறைகளை பின்பற்றி செயல்படுவதாகவும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பே இல்லாத வகையில் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் உறுதி செய்துள்ளது.
ஆரம்ப பரிசோதனைகள் வெற்றியடைந்தால், எதிர்வரும் 10 ஆண்டுகளில் இந்த புதிய தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் பெயர்களும், பரிசோதனைகள் நடைபெறும் இடங்களும் அறிவிக்கப்படவுள்ளன