
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கு இல்லை என பாகிஸ்தான் கூறியது. அதன் பின்னர் இந்த தாக்குதல் தொடர்பான நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை சர்வதேச நாடுகள் நடத்த வேண்டும் என்று தற்போது அந்நாடு கூறியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் ராணுவ மந்திரி குவாஜா ஆசிப் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த நெருக்கடியில் ரஷ்யா, சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் ஒரு மிக நேர்மையான பங்களிப்பை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் இதற்காக ஒரு விசாரணைக் குழுவை நியமித்துக் கூட விசாரணை நடத்தலாம். இந்தியா அல்லது மோடி பொய் சொல்கிறீர்களா? அல்லது உண்மை கூறுகிறார்களா? என்பதை ஒரு சர்வதேச குழு கண்டுபிடிக்கட்டும் என்று தெரிவித்தார். காஷ்மீர் தாக்குதல் குறித்து வெற்று பேச்சுகளும் அறிக்கைகளும் எந்த பலனும் தராது என்று கூறிய அவர், அதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிப்போம் என்றும் கூறினார்.