கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, T என்றால் த்ரிஷா. k என்றால் கீர்த்தி சுரேஷ். இதுதான் TVKவின் பெயர் காரணம். பிளாக்கில் சம்பளம் பெறும் அவர் நம்ம ஆட்சியை அகற்றப் போகிறாராம்.

இது என்ன சினிமா. சினிமாவில் வருவது போன்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நினைக்கிறார். பெற்ற தாய் தந்தையுடன் கூட விஜய் இல்லை என்று கூறினார். அவர் பேச பேச கட்சி நிர்வாகிகளும் நடிகைகளின் பெயரை சொல்லி விஜய்யை கிண்டலடித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு தற்போது பாஜக நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கக்கூடாது என்று பல அமைச்சர்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். பொன்முடியை தொடர்ந்து, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதி திருமுட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள், நடிகைகள் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்றோரை விஜயுடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஏன்?

உதயநிதி ஸ்டாலின் கூட பல படங்களில் கதாநாயகனாக(?) நடித்துள்ள(?) நிலையில் அவர் குறித்து விமர்சனம் செய்தால் பொறுத்துக்கொள்வீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே? மீண்டும் மீண்டும் பெண்களை கொச்சையாக பேசுவதையே வாடிக்கையாக்கி கொண்டு விட்டார்கள் திராவிட மாடல் அமைச்சர்கள். பொன்முடியை நீக்கியது போல் பன்னீர் செல்வத்தையும் நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏற்கனவே அமைச்சர் பொன்முடி பெண்கள் பற்றி  ஆபாசமாக பேசியதால்தான் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மற்றொரு அமைச்சரும் நடிகைகளை விஜயுடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.