
ஐரோப்பாவின் பல நாடுகளில் திடீரென கடுமையான மின்சார நெருக்கடி ஏற்பட்டது. ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால், விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் நகர போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மதிய வேளையில் மாட்ரிட்டிலிருந்து லிஸ்பன் வரை பரந்த பகுதிகள் இருளில் மூழ்கின. ஸ்பெயினின் தேசிய மின்கட்டமைப்பு நிறுவனம் ‘ரெட் எலக்ட்ரிகா’ மற்றும் போர்ச்சுகலின் ‘E-Redes’ நிறுவனம் இணைந்து மின்விநியோகத்தை மீட்டெடுக்க பல நெறிமுறைகளை செயல்படுத்தி வருகின்றன. ஆரம்ப விசாரணையில் மின்னழுத்த ஏற்றத் தாழ்வுதான் இந்த நெருக்கடிக்கு காரணம் என நம்பப்படுகிறது, இருப்பினும் சைபர் தாக்குதலாகவும் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்தடையால் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து விளக்குகள் செயலிழந்தன, மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன, சாலைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் அவசர சேவைகள் காப்பு ஜெனரேட்டர்களின் உதவியுடன் தொடர்ந்து வழங்கப்பட்டன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயின் அரசு பொதுமக்களுக்கு அவசர சேவைகளுக்கு தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஸ்பெயினில் நெருக்கடி மேலாண்மைக் குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கடந்த காலங்களில் சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளால் கூட ஐரோப்பாவில் பெரிய அளவிலான மின்தடைகள் ஏற்பட்ட அனுபவம் உள்ளதால், தற்போதைய நெருக்கடியும் தொழில்நுட்ப கோளாறு அல்லது சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஒரு மரம் மின் கம்பியை அறுத்ததன் விளைவாக இத்தாலி முழுவதும் இருளில் மூழ்கிய சம்பவம் நினைவுறுத்தப்படுகிறது. தற்போது, நாடுகளுக்கு இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய ஆணையம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.