குஜராத் மாநிலம் சூரத்தில், விளையாடிக் கொண்டிருந்தபோது தலையில் பெரிய ருள் விழுந்து காயமடைந்த 12 வயது மாணவன் பலியான சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ப்ளூ சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இந்த துயரமான நிகழ்வு நடந்துள்ளது.

சூரத்தின் சர்தானா அருகே உள்ள ப்ளூ சிட்டி குடியிருப்பில் வசித்து வந்த மந்த்ரா கேதன்பாய் அக்பரி (வயது 12), 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் தனது நண்பருடன் அடுக்குமாடி குடியிருப்பேன் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து பாரிஸ் பிளாஸ்டர் (POP) துண்டு ஒன்று திடீரென கீழே விழுந்தது. இந்த துண்டு நேராக மந்த்ராவின் தலையில் விழுந்ததால், அவர் உடனடியாக தரையில் சரிந்து விழுந்தார்.

இந்தக் கோரக் காட்சி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மாணவனுக்கு பலத்த காயம் அடைந்த நிலையில், முதலில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 11 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாணவர் மந்த்ரா உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வைரலாகி வரும் நிலையில் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.