ஐபிஎல் 2025 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான இன்னிங்ஸுடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஏப்ரல் 28ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், வெறும் 35 பந்துகளில் அவர் தனது சதத்தை (101 ரன்கள்) பூர்த்தி செய்து, ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த மிக இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம், டி-20 கிரிக்கெட் வரலாற்றிலும் மிக இளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டம், குஜராத் அணியின் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியது. குறிப்பாக, சிராஜ் பந்தில் 90 மீட்டர் நீளமுள்ள சிக்ஸர் அடித்து ‘வயது என்பது வெறும் எண்’ என்பதை நிரூபித்தார்.

இது அவரது மூன்றாவது ஐபிஎல் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது தீவிரமான பேட்டிங் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரமாக வலம் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் வைபவ் மீது அதிகரித்துள்ளது.